

சென்னை,
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றிபெற்றது. இந்திய வீரர் ஜெய்ஸ்வால் சதம் விளாசி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 1 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது.
இதையடுத்து, இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற 2 ஒருநாள் போட்டிகளிலும் இந்தியா வெற்றிபெற்றது.
இந்நிலையில், இந்தியா , ஆப்கானிஸ்தான் இடையேயான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 44.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 218 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய அந்த அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷகிடி சதம் விளாசினார். அவர் 102 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். சிறப்பாக பந்து வீசிய இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரு வீரர்களும் அரைசதம் விளாசினர். ரோகித் சர்மா 79 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதேவேளை, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் சதம் விளாசினார். இறுதியில் 28.1 ஓவர்கள் 224 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தானை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. சதம் விளாசிய ஜெய்ஸ்வால் 110 ரன்களுடனும், ஸ்ரேயாஷ் 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரை இந்ஹ்டியா முழுமையாக கைப்பற்றியது.