ஜடேஜா அப்படி செய்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் - இந்திய முன்னாள் வீரர் ஆதங்கம்

image courtesy:BCCI
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணியின் வெற்றிக்கு ஜடேஜா இறுதி வரை போராடினார்.
லண்டன்,
இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி கடந்த 10-ந்தேதி லண்டன் லார்ட்சில் தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் ஒரே மாதிரி 387 ரன்கள் எடுத்தன. 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 192 ரன்னில் அடங்கியது. இதனால் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
பின்னர் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 4-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்திருந்தது. கே.எல். ராகுல் 33 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இந்த நிலையில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 2-வது இன்னிங்சில் 74.5 ஓவர்களில் 170 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 22 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. ஜடேஜா 61 ரன்களுடன் (181 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி வரை களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 112 ரன்களுடன் ஊசலாடியது. அந்த தருணத்தில் 9-வது விக்கெட்டுக்கு ஜடேஜாவுடன், ஜஸ்பிரித் பும்ரா கூட்டு சேர்ந்தார். பும்ரா முழுக்க முழுக்க தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினார். கைதேர்ந்த பேட்ஸ்மேன் போல் ஆடிய பும்ரா ஒரு மணி நேரத்திற்கு மேலாக இங்கிலாந்து பவுலர்களை சோதித்தார். இதனால் இந்தியா கொஞ்சம் சரிவில் இருந்து மீள்வது போல் தெரிந்தது.
ஸ்கோர் 147-ஐ எட்டிய போது பும்ரா (5 ரன், 54 பந்து) ஸ்டோக்ஸ் வீசிய பந்தை தேவையில்லாமல் தூக்கியடித்து கேட்ச் ஆனார். ஆனாலும் ஜடேஜா களத்தில் நின்றதால் நம்பிக்கை குறையவில்லை. கடைசி விக்கெட்டுக்கு நுழைந்த முகமது சிராஜ் துணையுடன் ஜடேஜா தொடர்ந்து 4-வது அரைசதத்தை கடந்தார். இந்த சூழலில் சுழற்பந்து வீச்சாளர் சோயிப் பஷீர் வீசிய பந்தை எதிர்கொண்ட சிராஜ் அதை தடுத்து ஆடினார். பந்து பேட்டில் பட்டு உருண்டு ஸ்டம்பை தட்டியது. சிராஜ் 4 ரன்னில் (30 பந்து) போல்டு ஆனார்.
இந்நிலையில் பஷீர், ஜோ ரூட் ஆகியோரின் ஓவர்களில் ஜடேஜா சில பவுண்டரிகள் அடித்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கலாம் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இருப்பினும் வெற்றிக்காக போராடிய ஜடேஜாவுக்கு முழு மதிப்பெண் கொடுப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "60-70 ரன்கள் பார்ட்னர்ஷிப் இந்த ஆட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் இந்தியாவுக்கு அது ஒருபோதும் கிடைக்கவில்லை. ஜோ ரூட், பஷீர் பந்து வீசியபோது ஜடேஜா ரிஸ்க் எடுத்திருக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால் அவருடைய ஆட்டத்திற்கு முழு மதிப்பெண்கள் கொடுப்பேன்.
இருப்பினும் பஷீர் பந்து வீச வந்தபோது, ஜடேஜா ஒரு வாய்ப்பை எடுத்திருக்கலாம் என்று நினைத்தேன். 2-வதாக பும்ராவுடன் பேட்டிங் செய்தபோது அவருக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்தது. ஏனென்றால் ஸ்டோக்ஸ் மிட்-ஆப் திசையில் வட்டத்திற்குள் பீல்டிங் செய்து கொண்டிருந்தார். எனவே, அதை பயன்படுத்தி ஜடேஜா சில பவுண்டரிகள் அடித்திருக்கலாம். குறிப்பாக ஜோ ரூட் பந்து வீசும்போது அவர் ரிஸ்க் எடுத்திருக்கலாம். இது வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கலாம். பின்னர், சிராஜ் பேட்டிங் செய்ய வந்தபோது, ஸ்டோக்ஸ் எல்லை கோட்டிற்கு அருகில் நின்றார்" என கூறினார்.






