

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு (2027) ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இந்தத் தொடரில் இரு அணிகளும் 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் மோத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2027-31 காலகட்டத்திற்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) எதிர்கால சுற்றுப்பயணத் திட்டத்தின் அடிப்படையில் இந்தத் தொடர் திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், போட்டிகளுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை மற்றும் மைதானங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
இந்தத் தொடரில் நடைபெற உள்ள 5 டி20 போட்டிகளில் 2 ஆட்டங்களை அமெரிக்கா அல்லது கனடாவில் நடத்த வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி., லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கனடாவின் டொராண்டோ ஆகிய நகரங்கள் பரிசீலனையில் உள்ளன. குறிப்பாக வாஷிங்டன் டி.சி. மற்றும் டொராண்டோ நகரங்களுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டு போட்டிகளும் ஒரே மைதானத்தில் நடத்தப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
வட அமெரிக்காவில் கிரிக்கெட்டுக்கு ரசிகர்களை அதிகரிக்கும் நோக்கில் இந்த முயற்சியை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் மற்றும் கரீபியன் பகுதி மக்களின் ஆதரவைப் பயன்படுத்தி கிரிக்கெட்டை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் இடம்பெற உள்ள நிலையில், இந்தப் போட்டிகள் முக்கியத்துவம் பெறுகின்றன. மீதமுள்ள போட்டிகள் கரீபியன் தீவுகளில் நடைபெற வாய்ப்புள்ளது.
இந்திய அணி 2027-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பைக்கு தயாராகி வரும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் முக்கியமானதாக அமையும். இருப்பினும், போட்டிகளின் தேதிகள், மைதானங்கள் மற்றும் சுற்றுப்பயண விவரங்கள் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட வேண்டியுள்ளது.