

காலே,
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி காலேயில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா அறிமுக வீரராக இடம் பிடித்ததால், ரோகித் சர்மா ஓரங்கட்டப்பட்டார்.
டாஸ் ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி தயக்கமின்றி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஷிகர் தவான் மற்றும் புஜாரா ஆகியோரின் நேர்த்தியான ஆட்டத்தால் முதல் நாளில் இந்திய அணி முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. இரட்டை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட தவான் 190 ரன்களில் (168 பந்து, 31 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார். தவான்- புஜாரா ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 253 ரன்கள் திரட்டியது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 399 ரன்கள் குவித்தது. புஜாரா 144 ரன்களுடனும் (247 பந்து, 12 பவுண்டரி), ரஹானே 39 ரன்களுடனும் (94 பந்து, ஒரு பவுண்டரி) களத்தில் இருந்தனர். இரண்டாவது நாள் ஆட்டம் துவங்கியதும் புஜாரா மேற்கொண்டு 9 ரன்கள் சேர்த்து 153 ரன்களில் வெளியேறினார். ரகானே 57 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி உணவு இடைவேளை வரை 7 விக்கெட் இழப்புக்கு 503 ரன்களை குவித்துள்ளது. ஹர்திக் பாண்ட்யா 5 ரன்களிலும் ஜடேஜா 8 ரன்களிலும் களத்தில் உள்ளனர். இலங்கை அணியில் அதிகபட்சமாக நுவன் பிரதீப் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.