

இந்தியாவுக்கு வந்துள்ள ஜிம்பாப்வே பெண்கள் கிரிக்கெட் அணி 20 ஓவரை தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டி யில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.
இந்த நிலையில் இந்தியா-ஜிம்பாப்வே பெண்கள் அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வதோதராவில் இன்று நடந்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி பேட்டிங் செய்த இந்திய அணி , ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் தீப்தி சர்மாவின் அதிரடி சதங்களின் உதவியால் 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் எடுத்தது.
207 ரன்களுக்கு சுருண்ட ஜிம்பாப்வே
இதையடுத்து 329 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே மகளிர் அணி, இந்திய வீராங்கனைகளின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்தது.
இறுதியில் ஜிம்பாப்வே அணி 48.5 ஓவர்களில் 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக மோடஸ்டர் முப்பச்சிக்வா 49(70) ரன்கள் எடுத்தார்.
தொடரைக் கைப்பற்றிய இந்தியா
முதல் ஒருநாள் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, 2-வது போட்டியிலும் அபாரமாக செயல்பட்டு வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.