மகளிர் டி20 உலகக் கோப்பை: தொடரில் இருந்து விலகிய ஸ்ரேயங்கா பாட்டீல்... இளம் வீராங்கனைக்கு வாய்ப்பு

ஸ்ரேயங்காவின் விலகல் இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மகளிர் டி20 உலகக் கோப்பை: தொடரில் இருந்து விலகிய ஸ்ரேயங்கா பாட்டீல்... இளம் வீராங்கனைக்கு வாய்ப்பு
Published on

மும்பை,

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஸ்ரேயங்கா பாட்டீல், காயம் காரணமாக 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.

நெதர்லாந்து போட்டியில் காயம்

கடந்த புதன்கிழமை நடைபெற்ற குரூப்-ஏ ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது. அப்போது தான் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் பேட்டர் அடித்த பந்தை தடுக்க முயன்றபோது ஸ்ரேயங்கா பாட்டீலுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டது. காயம் தீவிரமாக இருந்ததால், அவர் ஸ்ட்ரெச்சர் உதவியுடன் மைதானத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்.

பிரேமா ராவத்துக்கு வாய்ப்பு

இந்நிலையில், 2026 ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து ஸ்ரேயங்கா பாட்டீல் விலகி இருப்பதாகவும் அவருக்கு மாற்று வீராங்கனையாக பிரேமா ராவத் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 'இந்தியா ஏ' அணியுடன் இங்கிலாந்தில் சுற்றுப்பயணத்தில் இருந்த பிரேமா ராவத், உடனடியாக உலகக் கோப்பைக்கான இந்திய அணியுடன் இணைய உள்ளார்.

சிறப்பாக பந்துவீசிய ஸ்ரேயங்கா

முன்னதாக, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற்ற ஆட்டத்தில் ஸ்ரேயங்கா பாட்டீல் 3 ஓவர்கள் வீசி 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியிருந்தார். ஸ்ரேயங்காவின் விலகல் இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படும் நிலையில், இளம் வீராங்கனை பிரேமா ராவத் கிடைத்த வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்த போகிறார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com