

சென்னை,
டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை தோற்கடித்து அபார வெற்றி பெற்றது.
கொழும்புவில் நேற்று இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 40 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இறுதியில் 18 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்திருந்தபோது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சிறப்பான ஆட்டத்திற்காக இஷான் கிஷன் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
போட்டிக்குப் பிறகு பேசிய இஷான் கிஷன், “இந்தியா-பாகிஸ்தான் போட்டி எங்களுக்கு மட்டுமல்ல, எங்கள் நாட்டிற்கும் மிகவும் ஸ்பெஷலானது. பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெறுவது நம்பிக்கையை அதிகரிக்கிறது. இதே செயல்திறனை தொடர்ந்து காட்ட முயற்சிப்போம்,” என்றார். இந்திய அணி அடுத்ததாக 18-ம் தேதி நெதர்லாந்து அணியை அகமதாபாத்தில் எதிர்கொள்கிறது.