பாகிஸ்தான் அமைச்சர் கையில் வெற்றிக் கோப்பையை வாங்க இந்தியா மறுப்பு - கையோடு எடுத்துச் சென்ற நிர்வாகம்

ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.
Image Courtesy: X (Twittet) / File Image 
Image Courtesy: X (Twittet) / File Image 
Published on

துபாய்,

ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த மோதலில் பாகிஸ்தான் நிர்ணயித்த 147 ரன்கள் என்ற இலக்கை 2 பந்துகள் மீதம் வைத்து இந்திய அணி எட்டிப்பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்திய அணி வெற்றி பெற்றதும் ஆட்டநாயகன் தொடர் நாயகன் விருதுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து தோல்வியடைந்த பாகிஸ்தான் அணிக்கு ரன்னர்-அப் 2-வது பரிசுக்கான காசோலை வழங்கப்பட்டது.

பின்னர், வெற்றி பெற்ற இந்திய அணிக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்க மேடைக்கு அழைக்கப்பட்டது. போட்டி முடிந்ததும் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக தாமதமானது. இந்த நிலையில், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோஷின் நக்வி கையில் இருந்து ஆசியக் கோப்பையை வாங்க இந்திய அணி வீரர்கள் மறுத்தனர்.

மோஷின் நக்வி இரண்டாம் இடம்பிடித்த பாகிஸ்தான் வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்குவார் என்று தொகுப்பாளர் சைமன் டவுல் அறிவித்தார். ஆனால், அவருக்குப் பதிலாக வங்கதேசத்தின் அமினுல் இஸ்லாம் அவற்றை வழங்கினார். இருப்பினும், நக்வி இரண்டாம் இடம்பிடித்தவர்களுக்கான காசோலையை பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவிடம் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் கேப்டன் ரோகித் சர்மா கோப்பையை கொண்டுவந்தது போல சைகை செய்து இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் வீரர்கள் பதக்கமில்லாமல் வெற்றியை கொண்டாடினர். இந்திய அணி கோப்பையை பெற்றுக்கொள்ளாததால் ஆசியக்கோப்பை நிர்வாகம் கோப்பையை கையோடு தூக்கி சென்றது.

முன்னதாக, இந்தியா - பாகிஸ்தான் இடையே இருநாடுகளுக்கும் இடையேயான மோதல்கள், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்ட காரணங்களால், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பாகிஸ் தான் கேப்டன் சல்மான் அலி அகா இருவரும் போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பு, டாஸ் உள்ளிட்டவற்றிலும் லீக் சுற்று, சூப்பர் 4 சுற்று போட்டியின் முடிவிலும் கைகுலுக்கவில்லை.

நேற்றையப் போட்டியிலும்கூட இரு கேப்டன்களையும் தனித்தனி தொகுப்பாளர்களே பேட்டி எடுத்தனர். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், பாகிஸ்தான் அமைச்சரிடமிருந்து இந்திய வீரர்கள் கோப்பையை வாங்க மறுத்திருப்பது மேலும் சலசலப்பையே உருவாக்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com