2032-35 காலகட்டத்தில் சில ஐசிசி தொடர்களை நடத்தும் இந்தியா

ஒருநாள் உலகக் கோப்பை என முக்கிய தொடர்கள் நடைபெற உள்ளன.
2032-35 காலகட்டத்தில் சில ஐசிசி தொடர்களை நடத்தும் இந்தியா
Published on: 

2032 முதல் 2035-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடைபெற உள்ள ஐசிசி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிலவற்றை இந்தியா நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த காலகட்டத்திற்கான போட்டி அட்டவணையை இந்த மாதம் 15-ம் தேதி பாலியில் நடைபெற்ற கூட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இறுதி செய்துள்ளது. இதன்படி 2032 மற்றும் 2034-ம் ஆண்டுகளில் டி20 உலகக் கோப்பை, 2033-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி, 2035-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை என முக்கிய தொடர்கள் நடைபெற உள்ளன. இவற்றில் சில போட்டிகள் இந்திய நேரத்திற்கு ஏற்ற காலகட்டத்தில் அமைந்துள்ளதால், இந்தியா நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஐசிசி

இருப்பினும், இந்தப் போட்டிகளை நடத்துவதற்கான உரிமையை ஐசிசி இதுவரை எந்த நாட்டுக்கும் வழங்கவில்லை. வழக்கமான நடைமுறையின்படி, போட்டிகளை நடத்த விரும்பும் உறுப்பு நாடுகளிடம் இருந்து ஐசிசி விண்ணப்பங்களை வரவேற்று, ஏல நடைமுறைக்குப் பிறகே நடத்தும் நாடுகளைத் தேர்வு செய்ய உள்ளது. எனவே, எந்தெந்த போட்டிகளுக்கு விண்ணப்பிப்பது என்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்யும். ஏற்கனவே 2029-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியையும், 2031-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை வங்காளதேசத்துடன் இணைந்தும் இந்தியா நடத்த உள்ளது. இதனால் 2035-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையை மீண்டும் இந்தியாவுக்கு ஒதுக்குவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கலாம் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் அணிகளின் எண்ணிக்கையை தற்போதுள்ள 9-ஆகவே தொடர ஐசிசி முடிவு செய்துள்ளது. ஜிம்பாப்வே, ஆப்கானிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளை சேர்ப்பது குறித்து ஆலோசிக்கப்பட்ட போதிலும், குறைந்தபட்சம் 2029-ம் ஆண்டு வரை புதிய அணிகள் சேர்க்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகம் முழுவதும் நடைபெறும் தனியார் டி20 லீக் போட்டிகளுக்கான விதிமுறைகள் குறித்தும் உடனடி முடிவு எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக லீக் நிர்வாகங்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என ஐசிசி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

X