

புதுடெல்லி,
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. கேப்டவுனில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நேற்று துவங்கியது. இப்போட்டியில், இந்திய அணி அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. துவக்க வீரர் தவான் நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் சேரக்கப்பட்டார். காயம் காரணமாக சகா போட்டியில் பங்கேற்கவில்லை. சகாவிற்கு பதிலாக பார்த்தீவ் படேல் ஆடும் லெவனில் இடம் பெற்றார். முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய புவனேஷ் குமார் நீக்கப்பட்டு இஷாந்த் ஷர்மா அணியில் சேர்க்கப்பட்டார். முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த புவனேஷ்குமார் நீக்கப்பட்டது அனைவரையும் புருவம் உயர்த்தச்செய்தது.
கிரிக்கெட் விமர்சகர்களும், இந்திய அணியின் செயல்பாடு பற்றி கேள்வி எழுப்பியிருந்தனர். இந்த நிலையில், இந்திய அணியின் அதிரடி மன்னன் என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவரும் முன்னாள் துவக்க ஆட்டக்காரருமான சேவாக், விராட் கோலியை கடுமையாக விமர்சித்துள்ளார். சேவாக் இது பற்றி கூறியிருப்பதாவது:- ஒரு போட்டியில் மோசமாக விளையாடிய ஷிகர் தவானையும் எந்த காரணமும் இன்றி புவனேஷ்குமாரையும் விராட் கோலி அணியில் இருந்து கழற்றி விட்டுள்ளார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கும் விராட் கோலி, செஞ்சூரியன் டெஸ்ட்டில் சோபிக்காவிட்டால், தன்னைத்தானே ஜோகன்னஸ்பர்க் போட்டியில் இருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
புவனேஷ்குமார் நீக்கம் பற்றி கருத்து தெரிவித்துள்ள சேவாக், புவனேஷ்குமாரை நீக்கியது சரியான முடிவு அல்ல. அதிக உயரமாக இருப்பதாக கூறி இஷாந்த் சர்மாவை விராட் கோலி சேர்த்து இருந்தால், அது புவனேஷ்குமாரின் தன்னம்பிக்கையை காயப்படுத்துவதாக இருக்கும். வேறு ஏதாவது பந்து வீச்சாளரை நீக்கி விட்டு இஷாந்த் ஷர்மாவை விளையாட வைத்திருக்கலாம். கேப்டவுன் டெஸ்டில் சிறப்பாக விளையாடிய புவனேஷ்குமாரை நீக்கியது நியாயம்ற்றது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
#indvsSA | #viratkohli