2028 ஒலிம்பிக் - தகுதிபெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி... ஆண்கள் அணிக்கு இப்படியொரு டுவிஸ்ட்டா? - முழு விவரம்

128 ஆண்டுகளுக்கு பிறகு கிரிக்கெட் மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் இடம்பெற்றுள்ளது.
2028 ஒலிம்பிக் -  தகுதிபெற்ற இந்திய மகளிர் கிரிக்கெட் அணி... ஆண்கள் அணிக்கு இப்படியொரு டுவிஸ்ட்டா? - முழு விவரம்
Published on

புதுடெல்லி,

2028-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தகுதி பெற்றுள்ளது.

128 ஆண்டுகளுக்கு பிறகு

128 ஆண்டுகளுக்குப் பிறகு கிரிக்கெட் மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் இடம்பெற்றுள்ளது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் தலா 6 அணிகள் பங்கேற்க உள்ளன. டி20 வடிவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

இந்திய மகளிர் அணி

பெண்கள் பிரிவை பொறுத்தவரை தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரே, ஒலிம்பிக்கிற்கான முதன்மை தகுதி தொடராக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசியா, ஓசியானியா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நான்கு கண்டங்களில் இருந்து சிறந்த அணிகள் தகுதிபெறும் என்று ஐசிசி அறிவித்தது.

இதன்படி, ஆசிய கண்டத்தில் சிறந்த அணியாக இந்தியா தகுதி பெற்றுள்ளது. இந்தியாவுடன் ஆஸ்திரேலியா, கிரேட் பிரிட்டன்(இங்கிலாந்து) மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் 2028 ஒலிம்பிக்கில் இடம்பிடித்துள்ளன.

ஆண்கள் அணி

ஆண்கள் அணிக்கான தகுதி விதிமுறைகள் பெண்கள் பிரிவிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளன. உலகக் கோப்பை முடிவுகள் அடிப்படையில் அல்லாமல், ஐசிசியின் டி20 சர்வதேச தரவரிசை அடிப்படையில் அணிகள் தேர்வு செய்யப்படுகின்றன.

அதனபடி, 2026 டிசம்பர் 31-ம் தேதி நிலவரப்படி, ஆசிய நாடுகளில் தரவரிசை பட்டியலில் இந்திய அணி டாப் இடத்தில் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் இந்திய ஆண்கள் அணி ஒலிம்பிக்கிற்கு தகுதி பெறும்.

மீதமுள்ள இடங்கள்

போட்டியை நடத்தும் அமெரிக்க அணி, குறைந்தபட்ச தரவரிசை தகுதியை பூர்த்தி செய்தால் அதற்கு நேரடி இடம் வழங்கப்படும். மீதமுள்ள கடைசி அணி, 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டி மூலம் தேர்வு செய்யப்படும்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com