20 விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை இந்திய அணியிடம் இருக்கிறது - பயிற்சியாளர் மோர்கல்

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது.
20 விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை இந்திய அணியிடம் இருக்கிறது - பயிற்சியாளர் மோர்கல்
Published on: 

டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கு தேவையான 20 விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை எங்களிடம் இருக்கிறது என்று இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்தார்.

வெலிங்டன்,

முதலாவது டெஸ்ட்

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும். ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கிலும் கைப்பற்றி கலக்கியது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல், ஜெய்ஸ் வால், தேவ்தத் படிக்கல், ரிஷப் பண்ட், துருவ் ஜூரெலும், பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் பிராரும் நல்ல நிலையில் உள்ளனர்.

டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து அணி உள்ளூரில் எப்போதும் பலம் வாய்ந்ததாகும். பேட்டிங்கில் டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா. டிவான் கான்வேயும், பந்து வீச்சில் மேட் ஹென்றி, கைல் ஜாமிசன், நாதன் சுமித், ஜேக்கப் டப்பியும் மிரட்டக்கூடியவர்கள்.

உலக சாம்பியன்ஷிப்...

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியலில் 4-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் இந்த தொடரை வெல்ல வேண்டியது அவசியமானதாகும். எனவே இந்திய அணியினர் தங்களது முழு பலத்தையும் வெளிப்படுத்துவார்கள்.

கடந்த ஜூன் மாதத்தில் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் சாய்த்து 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை சொந்தமாக்கிய நியூசிலாந்து அணி, அதே உத்வேகத்துடன் செயல்பட்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்கவைக்க வரிந்து கட்டும்.

வலுவான இவ்விரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. அதேநேரத்தில் வேகப்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இந்த மைதானத்தில் குளிர்ச்சியாக சீதோஷ்ண நிலையுடன் காற்றின் தாக்கமும் அதிகமாக இருக்கும். இந்த சூழலை சரியாக கையாளும் அணியின் கையே ஓங்கும்.

மோர்கல் கருத்து

போட்டி குறித்து இந்திய அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் நிருபர்களிடம் பேசுகையில், “முகமது சிராஜ் உலகத் தரம் வாய்ந்த வீரர். அவர் ஒவ்வொரு முறை அணிக்காக களம் இறங்கும் போதும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அவர் இந்த போட்டிக்கு தயாராக கடுமையாக உழைத்து இருக்கிறார். டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதற்கு தேவையான 20 விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை எங்களது பந்து வீச்சாளர்களிடம் இருக்கிறது. அணியில் வீரர்கள் கலவை எப்படி இருக்க வேண்டும் என்பதை கேப்டன் சுப் மன் கில் தான் முடிவு செய்வார். வெலிங்டன் மைதானத்தில் பலத்த காற்றுக்கு எதிராக பந்து வீசுவது என்பது சவாலானது. சூழ்நிலைக்கு ஏற்ப உங்களது அணுகுமுறையை மாற்றி மன உறுதியோடு செயல்பட வேண்டும். வெளியில் இருந்து வரும் விமர்சனங்களை புறந்தள்ளி விட்டு துல்லியமாக பந்து வீசுவதில் பவுலர்கள் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் கூறுகையில், “உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் எனது கவனம் இல்லாவிட்டாலும், எங்களால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயங் களை கட்டுபடுத்துவோம். எங்களுக்குரிய வழக்கமான பாணியில் ஆடி சிறப்பான திறனை வெளிப்படுத்துவோம். இந்த தொடரில் 3 வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஒரு பந்து வீச்சு ஆல்-ரவுண்டருடன் களம் இறங்குவோம்” என்றார்.

X