

புதுடெல்லி,
ஐசிசி மகளிர் ஒருநாள் தரவரிசையில் இந்திய வீராங்கனை வைஷ்ணவி சர்மா 53 இடங்கள் முன்னேறியுள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய மகளிர் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த தொடரில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய வீராங்கனைகள், ஐசிசி வெளியிட்டுள்ள புதிய மகளிர் ஒருநாள் தரவரிசையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளனர்.
இந்திய அணியின் 20 வயது இடதுகை சுழற்பந்து வீச்சாளர் வைஷ்ணவி சர்மா, புதிய தரவரிசையில் மிகப்பெரிய முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் மட்டும் அவர் 9 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், மூன்றாவது போட்டியில் 39 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் தனது முதல் 5 விக்கெட் சாதனையைப் பதிவு செய்ததுடன், ஆட்டநாயகி விருதையும் வென்றார்.
இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 53 இடங்கள் முன்னேறி 94-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்தியாவின் மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான சாயலி சத்காரே, மூன்றாவது ஒருநாள் போட்டியில் 6 ஓவர்கள் வீசி 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதில் 30 பந்துகளை ரன் எதுவும் கொடுக்காமல் வீசியிருந்தார். இதன் பலனாக அவர் 18 இடங்கள் முன்னேறி 85-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
கிராந்தி கௌட் ஒரு இடம் முன்னேறி 24-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
பேட்டிங் தரவரிசையில் இந்திய தொடக்க வீராங்கனை பிரத்திகா ராவல் 3 இடங்கள் முன்னேறி 18-வது இடத்தைப் பிடித்துள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் தொடர்ந்து மூன்று அரைசதங்களைப் பதிவு செய்தது அவரது முன்னேற்றத்துக்கு உதவியுள்ளது.
மற்றொரு தொடக்க வீராங்கனையான ஷபாலி வர்மா, கடைசி ஒருநாள் போட்டியில் 51 ரன்கள் விளாசினார். இதன் மூலம் அவர் 8 இடங்கள் முன்னேறி, 65-வது இடத்தை மற்றொரு வீராங்கனையுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஜிம்பாப்வே தொடரில் இந்திய வீராங்கனைகள் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம், தற்போது ஐசிசி தரவரிசையிலும் பிரதிபலித்துள்ளது.