

புதுடெல்லி,
பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாக மாறிவரும் ஆடுகளங்கள் குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முன்வைத்த கருத்துக்கு, இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சஹால் ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே அக்டோபர் 9ஆம் தேதி ராஞ்சியில் நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில், இரு அணிகளும் சேர்ந்து 501 ரன்களைக் குவித்தன. இந்தியா 249 ரன்கள் எடுத்தும் தோல்வியடைந்தது. ஷாய் ஹோப்பின் ஆட்டமிழக்காத 102 ரன்களும், ஷெர்பேன் ரூதர்போர்டின் அதிரடி 84 ரன்களும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியைப் பெற்றுத் தந்தன. அந்த அணி 18.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டியது.
இந்த அபாரமான ரன் குவிப்பு, பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கு இடையிலான சமநிலை குறித்த விவாதத்தை மீண்டும் முன்னிலைக்குக் கொண்டுவந்துள்ளது.
ஜியோஸ்டாரின் நிகழ்ச்சியில் பேசிய யுஸ்வேந்திர சஹால் கூறியதாவது:
“இதுபோன்ற ஆடுகளங்களில் பந்துவீச்சாளர்களுக்கு எதுவுமே சாதகமாக இருப்பதில்லை. பந்து பழையதாகும்போது, பனிப்பொழிவும் சேர்ந்து கொள்கிறது. இதனால் பந்து பேட்டிற்கு எளிதாக வருகிறது. அதேசமயம், மைதானங்களின் எல்லைக் கோடுகளும் சிறியதாகி வருகின்றன.
ஐபிஎல் தொடரிலும் இதைப் பார்த்திருக்கிறோம். 19 ஓவர்களில் 260 ரன்கள் என்ற இலக்கைக்கூட அணிகள் துரத்திப் பிடித்துள்ளன. இந்தப் போட்டியிலும் 250 ரன்கள் என்ற இலக்கை 18.3 ஓவர்களில் எளிதாக எட்டிவிட்டார்கள்.
அப்படியென்றால், பந்துவீச்சாளர்கள் என்னதான் செய்வார்கள்? அவர்களுடைய திறமைக்கு என்ன மதிப்பு இருக்கிறது? நானும் ஒரு பந்துவீச்சாளர் என்பதால் அவர்களுடைய நிலைமையை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
ஐபிஎல் தொடரில் சிறிய மைதானங்கள், பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளங்கள் மற்றும் இம்பாக்ட் பிளேயர் விதி ஆகியவை பந்துவீச்சாளர்களின் சவால்களை அதிகரிப்பதாகவும் சஹால் தெரிவித்துள்ளார்.