சர்வதேச கிரிக்கெட்: கேப்டன்சியில் விராட் கோலியின் மோசமான சாதனையை சமன் செய்த சுப்மன் கில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது.
image courtesy:PTI
image courtesy:PTI
Published on

பெர்த்,

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் போட்டி தொடர் நடைபெறுகிறது.

ரோகித் சர்மாவிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக சுப்மன் கில் சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதல்முறையாக களம் கண்டது.

இந்நிலையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பெர்த்தில் இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்சேல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கையில் அவ்வப்போது மழை குறுக்கிட்டது. அதன் காரணமாக இந்த போட்டி 50 ஓவர்களுக்கு பதிலாக 26 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இந்த சூழலில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 26 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 38 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஹேசல்வுட், ஓவன், மேத்யூ குனேமான் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து டி.எல்.எஸ். விதிகளின்படி ஆஸ்திரேலிய அணி 26 ஓவர்களில் 131 ரன்களை எடுக்க வேண்டும் என வெற்றி இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, 131 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலியா 21.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கேப்டன் மிட்செல் மார்ஷ் 46 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

இதன் மூலம் இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற சுப்மன் கில் தனது பயணத்தை தோல்வியுடன் தொடங்கியுள்ளார். முன்னதாக சுப்மன் கில் பொறுப்பேற்ற டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளின் முதல் போட்டியிலும் தோல்வியையே சந்தித்திருந்தார்.

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் டி20, டெஸ்ட், ஒருநாள் கிரிக்கெட் என 3 பார்மட்களிலும் கேப்டனாக தனது முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய இந்திய கேப்டன் என்ற விராட் கோலியின் மோசமான சாதனையை கில் சமன் செய்துள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com