image courtesy:PTI
image courtesy:PTI

ஐ.பி.எல்.: ஒரு ஓவரில் 11 பந்துகள்.. மோசமான சாதனை படைத்த சந்தீப் சர்மா

ராஜஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் சந்தீப் சர்மா இந்த சாதனையை படைத்துள்ளார்.
Published on

புதுடெல்லி,

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய 32-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அபிஷேக் போரல் 49 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து 189 ரன் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியும் 4 விக்கெட்டுக்கு 188 ரன்கள் அடித்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது. இதையடுத்து வெற்றி தோல்வியை நிர்ணயிக்க ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.

சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் 5 பந்தில் இரு விக்கெட்டுகளையும் இழந்து 11 ரன் எடுத்தது. பின்னர் 12 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 4 பந்தில் 13 ரன் சேர்த்து வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா கடைசி ஓவரில் (20-வது ஓவர்) 4 வைடு, ஒரு நோபால் உள்பட 11 பந்துகள் வீசி 19 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

இதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு ஓவரில் அதிக பந்துகள் வீசிய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனை பட்டியலில் சிராஜ், தேஷ்பாண்டே மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோருடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளார். இவர்கள் அனைவரும் ஒரே ஓவரில் எக்ஸ்டிரா உட்பட 11 பந்துகள் வீசி மோசமான சாதனை படைத்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com