ஐபிஎல் கிரிக்கெட்: ஒரே சிக்சரில் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த விராட் கோலி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி அநாயசமாக அடித்த ஒரு சிக்சர் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
ஐபிஎல் கிரிக்கெட்: ஒரே சிக்சரில் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த விராட் கோலி
Published on

புதுடெல்லி,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் டெல்லி பெரோஸ்ஷா கோட்லா மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த கடைசி (56-வது) லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியை வீழ்த்தி ஆறுதல் வெற்றி பெற்றது. வலுவான அணியாக கருதப்பட்ட விராட்கோலி தலைமையிலான பெங்களூரு அணி லீக் ஆட்டங்கள் முடிவில் 3 வெற்றி, 10 தோல்வியுடன் (ஒரு ஆட்டம் முடிவில்லை) 7 புள்ளிகள் பெற்று கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது.

கெயில், டி வில்லியர்ஸ், விராட் கோலி, வாட்சன் என நட்சத்திர பட்டாளம் நிறைந்த பெங்களூரு அணி நடப்பு ஐபிஎல் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வியை சந்தித்தது. பெங்களூரு ரசிகர்களை இந்த தோல்வி ஏமாற்றத்திற்குள்ளாக்கியது. ஆறுதல் அளிக்கும் விஷயமாக நேற்று முன் தினம் இறுதிப்போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்தது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி 50 ரன்களுக்கு மேல் 11 முறை எடுத்து ஆகச்சிறந்த பார்மில் இருந்தார். ஆனால் நடப்பு 10-வது ஐபிஎல் தொடரில் வெறும் 4 அரைசதங்கள் மட்டுமே எடுத்தார். இருப்பினும் நேற்று முன் தினம் நடைபெற்ற போட்டியின் போது விராட் கோலி விளாசிய ஒரு சிக்சர் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 58 ரன்களை சேர்த்த விராட் கோலி, 10 ரன்களில் பேட் செய்து கொண்டிருந்த போது, கோரி ஆண்டர்சன் வீசிய பந்தை, அநாயசமாக சிக்சருக்கு விளாசியது நம்ப முடியாத வகையில் இருந்தது. விராட் கோலி, லேசாக பந்தை புஷ் செய்தார். அந்த பந்து லாங் ஆஃப் திசைக்கு சிக்சராக பறந்தது, நடப்பு ஐபிஎல் தொடரில் மறக்க முடியாத சிக்சராக அது அமைந்தது. போட்டி நிறைவு பெற்ற பிறகு விராட் கோலி, இந்த சிக்சர் குறித்து கூறுகையில், உண்மையில் சொல்லவேண்டும் என்றால், இரண்டு வீரர்களுக்கு இடையே பந்தை தள்ளிவிட்டு இரண்டு ரன்கள் எடுக்கவே முயற்சித்தேன். ஆனால், அது சிக்சருக்கு சென்றுவிட்டது. நான் பந்தை அடித்த விதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது என்றார். பெங்களூரு அணி ஐபிஎல்லில் படுதோல்வியை சந்தித்தாலும் விராட் கோலி அடித்த சிக்சரை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புகழ்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com