ஐ.பி.எல். 2024: ரிஷப் பண்ட் விளையாடுவது 100 சதவீதம் உறுதி... ஆனால் - பாண்டிங்

2024 ஐ.பி.எல். தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவது 100 சதவீதம் உறுதி என்று பாண்டிங் கூறியுள்ளார்.
image courtesy: PTI
image courtesy: PTI
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரின் 17-ஆவது சீசன் வரும் 22-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.

இந்த தொடரில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கிறது. ஏனெனில் கடந்த 2022 டிசம்பர் மாதம் கார் விபத்தில் சிக்கிய அவர், அதற்காக அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு கடந்த ஒரு வருடமாக எந்த போட்டிகளிலும் விளையாடவில்லை. குறிப்பாக கடந்த வருடம் நடந்த 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, ஐ.பி.எல். மற்றும் உலகக்கோப்பை ஆகிய 3 தொடர்களில் பங்கேற்க முடியவில்லை.

தற்போது நன்றாக குணமடைந்து மீண்டும் பயிற்சிகளை மேற்கொண்ட அவர் ஐ.பி.எல். தொடரில் விளையாடுவதற்கு பிட்டாக இருப்பதாக பெங்களூருவில் உள்ள என்.சி.ஏ. சான்றிதழ் வழங்கியுள்ளது. அதனால் 2024 ஐ.பி.எல். தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவார் என்று நம்பப்படுகிறது.

இருப்பினும் சில காலங்களாக எவ்விதமான போட்டிகளிலும் விளையாடாமல் இருக்கும் அவர் கடினமான விக்கெட் கீப்பிங் செய்வாரா அல்லது கேப்டனாக மட்டும் விளையாடுவாரா அல்லது சாதாரண பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்குவாரா என்பது இன்னும் குழப்பமாகவே இருக்கிறது.

இந்நிலையில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் பயிற்சிகளை செய்து வருவதாக டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். எனவே 2024 ஐ.பி.எல். தொடரில் ரிஷப் பண்ட் 100 சதவீதம் விளையாடுவது உறுதி என்றும் பாண்டிங் கூறியுள்ளார். இருப்பினும் அவர் பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடுவாரா அல்லது கீப்பராக செயல்படுவாரா என்ற முடிவை இன்னும் எடுக்கவில்லை என்று தெரிவிக்கும் பாண்டிங் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"அது மிகப்பெரிய முடிவு. நாங்கள் அதை எடுக்க வேண்டும். ஏனெனில் பிட்டாக இருக்கும் பட்சத்தில் அவர் நேராக கேப்டன்ஷிப் செய்வதற்கு வருவார் என்று நீங்கள் நினைப்பீர்கள். ஒருவேளை முழுமையாக பிட்டாக இல்லாமல் போனாலும் நாங்கள் அவரை வித்தியாசமான வேலையில் பயன்படுத்துவோம். அந்த முடிவை நாங்கள் விரைவில் எடுப்போம். கடந்த சில வாரங்களாக அவர் சில பயிற்சி போட்டிகளில் விளையாடியது எங்களுக்கு தன்னம்பிக்கையை கொடுத்துள்ளது.

பழைய பிட்னெஸ் பெறுவதற்காக அவர் கடினமாக வேலை செய்துள்ளார் என்பதை நாங்கள் அறிவோம். அவர் ஒரு பயிற்சிப் போட்டியில் கீப்பிங் செய்தார். மற்றொரு போட்டியில் பீல்டராக பயிற்சி எடுத்த அவருக்கு பேட்டிங் ஒரு பிரச்சினையாக இல்லை. இம்முறையும் அவர் ஐ.பி.எல். தொடரில் விளையாட வர மாட்டாரோ என்ற கவலை எங்களிடம் இருந்தது. ஏனெனில் கடந்த வருடம் அவர் விளையாடாதது எங்களுக்கு பெரிய இழப்பு. தற்போது அவர் விளையாட வருவதைப் பார்க்க மொத்த உலகமும் காத்திருக்கிறது" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com