

தர்மசாலா,
ஐபிஎல் தொடரில் தர்மசாலாவில் இன்று இரவு 7.30 மணிக்கு துவங்கும் 55-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், இந்த ஆட்டத்திற்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இதுவரை 10 ஆட்டங்களில் ஆடியுள்ள பஞ்சாப் அணி அதில் 6 வெற்றி, ஒரு முடிவில்லை, 3 தோல்வியுடன் 13 புள்ளிகள் பெற்றுள்ளது. முதல் 7 ஆட்டங்களில் தோல்வியை தொடாத அந்த அணி கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோற்று சரிவை சந்தித்துள்ளது. டெல்லி அணி 11 ஆட்டங்களில் ஆடி 4 வெற்றி , 7 தோல்வி கண்டு 'பிளே-ஆப்' சுற்றை ஏறக்குறைய இழந்து விட்டது. இந்த ஆட்டத்தில் தோற்றால் முழுமையாக முடிந்து போகும். கடந்த 6 ஆட்டங்களில் ஒன்றில் மட்டும் ஜெயித்தது.
பஞ்சாப் அணி சரிவில் இருந்து மீண்டு வெற்றிப்பாதைக்கு திரும்புவதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற முனைப்பு காட்டும். இனிமேல் இழக்க எதுவுமில்லை என்ற நிலையில் இருக்கும் டெல்லி அணி நெருக்கடியின்றி விளையாடும். அத்துடன் பஞ்சாப் அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கண்டு இருந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க முழுமுயற்சி மேற்கொள்ளும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.