

பெங்களூரு,
ஐபிஎல் 2026 தொடரில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, 6 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. இன்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் 34-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு, குஜராத்துடன் மோதி வருகிறது.
இந்நிலையில், போட்டிக்கு முன்பு ஆர்சிபி போட்காஸ்டில் கேப்டன் ரஜத் படிதார் மனம் திறந்து பேசினார். அணியின் பேட்டிங் குறித்துப் பேசிய படிதார், "எதிரணியை ஆதிக்கம் செலுத்துவது தான் எங்களது மனநிலை. ஆனால், அதில் நாங்கள் பிடிவாதமாக இருக்க மாட்டோம். ஆட்டத்தின் சூழலுக்கு ஏற்ப எங்களை மாற்றிக்கொள்வோம். இந்த நெகிழ்வுத்தன்மை (Flexibility) தான் எங்களது பேட்டிங் யூனிட்டின் பலம்," என்று தெரிவித்தார்.
இந்த சீசனில் 230 ரன்கள் குவித்து முன்னணியில் இருக்கும் படிதார், தனது பேட்டிங் மாற்றத்திற்கு மனநிலையே காரணம் என்கிறார். "தினேஷ் கார்த்திக்குடன் (DK) ஆலோசித்து எனது பேட்டிங் நுணுக்கங்களில் சில மாற்றங்களைச் செய்தேன். ஒரு பந்துவீச்சாளரை என்னால் எதிர்கொள்ள முடியும் என்று தோன்றினால், தயக்கமின்றி அதிரடியில் இறங்குவேன்," என்றார்.