

சென்னை,
நடப்பு 2026 ஐபிஎல் தொடரில் இன்று (திங்கட்கிழமை) இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்பிரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளன. இந்தச் சூழலில், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும், ரசிகர்களும் உற்று நோக்கும் ஒரே பெயர் எம்.எஸ். தோனி.
நடப்பு சீசனில் தொடக்கத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக தோனி இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. சிஎஸ்கே அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் கட்டாயம் வென்றாக வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலை நிலவுகிறது.
இதற்கிடையில், சென்னை ரசிகர்களுக்கு தோனி கொடுத்த பழைய வாக்குறுதி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தனது கடைசி ஐபிஎல் போட்டியை சென்னை ரசிகர்களின் முன்னிலையில்தான் விளையாடுவேன் என்று தோனி கூறியிருந்தார். இது இந்த சீசனில் சிஎஸ்கே-வின் கடைசி ஹோம் மேட்ச் ஆகும். இதனால் தோனி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லையென்றால் அவரை அடுத்த சீசனில் நாம் பார்க்க அதிக வாய்ப்பு உள்ளது.