

அகமதாபாத்,
ஐபிஎல் 2026 தொடரில் ரன்கள் மழை பெய்திருந்தாலும், சில வரலாற்றுச் சாதனைகள் யாராலும் நெருங்க முடியாத உயரத்தில் நீடித்து வருகின்றன. இளம் நட்சத்திரம் வைபவ் சூர்யவன்ஷி உள்ளிட்ட பல வீரர்கள் அபாரமாக விளையாடிய போதிலும், விராட் மற்றும் கிறிஸ் கெயிலின் ஐபிஎல் சாதனைகள் தொடர்ந்து அசைக்க முடியாதவையாகவே உள்ளன.
2013-ம் ஆண்டு கிறிஸ் கெயில் , புனே வாரியர்ஸுக்கு எதிராக வெறும் 66 பந்துகளில் 175 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றின் மிகப்பெரிய தனிநபர் ஸ்கோரை பதிவு செய்தார். இந்த சீசனில் கே.எல்.ராகுல், பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக 152 ரன்கள் விளாசி சாதனையை நெருங்கினாலும், கெயிலின் மாபெரும் சாதனையை முறியடிக்க முடியவில்லை.
2016-ம் ஆண்டு விராட் கோலி நிகழ்த்திய 973 ரன்கள் சாதனை இன்னும் எட்டாத உயரமாகவே உள்ளது. இந்த சீசனில் வைபவ் சூர்யவன்ஷி 776 ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வென்றார்.
2013-ல் கிறிஸ் கெயில் வெறும் 30 பந்துகளில் சதமடித்து ஐபிஎல் வரலாற்றின் அதிவேக சத சாதனையை படைத்தார். இந்த சீசனில் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில் 97 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்ததால், கெயிலின் சாதனையை உடைக்கும் வாய்ப்பு நூலிழையில் தவறியது.
ஒரே சீசனில் அதிகபட்சமாக 4 சதங்கள் அடித்த சாதனையை விராட் கோலி (2016) மற்றும் பட்லர் (2022) பகிர்ந்து வைத்துள்ளனர். இந்த சீசனில் எந்த பேட்டரும் அந்த இலக்கை நெருங்கவில்லை. சாம்சன் மட்டுமே 2 சதங்கள் அடித்தார். மற்ற வீரர்கள் தலா ஒரு சதம் மட்டுமே பதிவு செய்தனர்.
ரன்கள் மழை பொழிந்த ஐபிஎல் 2026-ல் பல புதிய சாதனைகள் உருவானாலும், கிறிஸ் கெயில் மற்றும் விராட் கோலி படைத்த இந்த 5 வரலாற்று மைல்கற்கள் இன்னும் உடைக்க முடியாத சாதனைகளாகவே நீடிக்கின்றன. அடுத்த சீசன்களில் யாராவது இந்த சாதனைகளை முறியடிப்பார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.