

தர்மசாலா,
ஐபிஎல் தொடரில் தர்மசாலாவில் நேற்று முந்தினம் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ்அணிக்கு எதிரான விறுவிறுப்பான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 200/8 ரன்கள் குவித்த போதிலும், மும்பை அணி கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் இலக்கை எட்டி திரில் வெற்றி பெற்றது.
இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஆர்சிபி அணியுடன் பஞ்சாப் நாளை மோதுகிறது. இப்போட்டி குறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் பாங்கர் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஹர்பிரீத் ப்ராரை மீண்டும் பயன்படுத்த இதுவொரு நல்ல வாய்ப்பு. ஏனெனில் அவர் எப்போதும் ஒரு தரமான வீரர், ஆர்சிபி அணிக்கு எதிராக அவர் எப்போதும் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். நான் ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக இருந்தபோது, கடந்த சில வருடங்களாகவே அவர் பெங்களூரு பேட்ஸ்மேன்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருந்ததை நேரில் பார்த்திருக்கிறேன்" என்று கூறினார்.
மேலும் பேசிய பாங்கர், "ஆர்சிபி அணிக்கு எதிரான அடுத்த போட்டி பகல் நேரப் போட்டியாக நடப்பது பஞ்சாப் அணிக்குச் சாதகமானது. இதனால் அவர்களால் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்த முடியும். இந்த சீசனில் பஞ்சாப் அணி ஏற்கனவே தங்களது வேகப்பந்து வீச்சு காம்பினேஷன்கள் அனைத்தையும் சோதித்துப் பார்த்துவிட்டது. எனவே, இப்போது சுழற்பந்து வீச்சை நம்பி களம் இறங்குவது எதிரணி பேட்ஸ்மேன்களைக் கட்டுப்படுத்த உதவும்" என கூறினார்.
தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வியடைந்துள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி, பிளே-ஆப் ரேஸில் நீடிக்க வேண்டுமானால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.