

சென்னை,
பீகாரை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தால் உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். கடந்த ஆண்டு, வெறும் 13 வயதில் ரூ.1.1 கோடி மதிப்பில் ராஜஸ்தான் அணியால் வாங்கப்பட்டு, ஐபிஎல் ஒப்பந்தம் பெற்ற இளம் வீரராக சாதனை படைத்தார்.
அதே ஆண்டில் குஜராத்துக்கு எதிரான போட்டியில் 38 பந்துகளில் 101 ரன்கள் அடித்து, ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் சதம் அடித்த வீரராக மாறினார்.
இதற்கிடையில், ஜோஸ் பட்லர் இந்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை பாராட்டினார். அவர் பேசுகையில், “வைபவ் நான் பார்த்த சிறந்த இளம் வீரர்களில் ஒருவர். யு-19 உலகக்கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிராக அவர் 80 பந்துகளில் 175 ரன்கள் எடுத்த இன்னிங்ஸ் மறக்க முடியாதது. அவர் 21 அல்லது 25 வயதை எட்டும் போது, உலக கிரிக்கெட்டையே ஆட்கொள்ளப் போகிறார்” என்றார்.
நடப்பு சீசனிலும் வைபவ் சிறப்பான பார்மில் உள்ளார். சென்னை அணிக்கு எதிராக கவுகாத்தியில் நடந்த போட்டியில் வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். நேற்று குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் 18 பந்துகளில் 31 ரன்கள் அடித்தார்.