

ஐ.பி.எல். 2027-ம் ஆண்டு மினி ஏலத்துக்கான வீரர்கள் பட்டியலில் இந்திய முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக்கின் மகன் ஆர்யவீர் சேவாக் மற்றும் இளம் வீரர் மொஹித் உல்வா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இருவரும் தலா ரூ.30 லட்சத்தை அடிப்படை விலையாக நிர்ணயித்து ஏலத்துக்கு தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
ஓமனில் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய ஆர்யவீர் சேவாக் 5 ஆட்டங்களில் 361 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதை வென்றார். பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் 58 ரன்கள் எடுத்தும் அசத்தினார். இதேபோல் இறுதிப்போட்டியில் இந்திய அணி நெருக்கடியான நிலையில் இருந்தபோது களமிறங்கிய மொஹித் உல்வா 26 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் விளாசி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினார். கடைசி பந்தில் பவுண்டரி அடித்து இந்திய அணிக்கு கோப்பையைப் பெற்றுத் தந்தார்.
இந்திய 19 வயதுக்குட்பட்டோர் அணியின் கேப்டன் லட்சயா ராய்ச்சந்தானி மற்றும் முன்னாள் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட்டின் மகன் அன்வய் டிராவிட் ஆகியோர் ஏலத்துக்குப் பெயர்களைப் பதிவு செய்யவில்லை. அதேநேரத்தில் காவின் படேல் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார். இருப்பினும், ஏலத்துக்கான ஆரம்பப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது மட்டுமே வீரர்கள் ஏலத்தில் பங்கேற்பதை உறுதி செய்யாது. அணிகளின் விருப்பத்தின் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். ஐ.பி.எல். 2027 மினி ஏலம் டிசம்பர் 16-ந்தேதி கோவாவில் நடைபெற உள்ளது.