ஐபிஎல் 2027: 3 அணிகளுக்கு புதிய கேப்டன்களை பரிந்துரைத்த பாப் டு பிளெசிஸ்

2027-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன.
பாப் டு பிளெசிஸ்
Published on: 

துபாய்,

ஐபிஎல் 2027‍ல் 3 அணிகளுக்கு பாப் டு பிளெசிஸ் புதிய கேப்டன்களை பரிந்துரைத்துள்ளார்.

புதிய கேப்டன்

2027-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடருக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அணிகளின் கேப்டன் தேர்வு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் பாப் டு பிளெசிஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 3 அணிகளுக்கு புதிய கேப்டன்களை தேர்வு செய்துள்ளார்.

லக்னோ அணி

2026-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் ரிஷப் பண்ட் தலைமையில் விளையாடிய லக்னோ அணி, புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்தது. இதையடுத்து ரிஷப் பண்ட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். மேலும், அவர் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு டிரேட் செய்யப்பட்டார். பதிலாக குல்தீப் யாதவ் லக்னோ அணிக்கு வந்தார்.

இதனால் லக்னோ அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு எய்டன் மார்க்ரம் அல்லது மிட்செல் மார்ஷ் ஆகிய இருவரில் ஒருவரை கேப்டனாக நியமிக்கலாம் என்று பாப் டு பிளெசிஸ் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா அணி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக இருந்த அஜிங்க்யா ரஹானே, கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதனால் அந்த அணிக்கும் புதிய கேப்டன் தேவைப்படுகிறது.

இந்த நிலையில், இந்திய வீரர் ரிங்கு சிங்கை கேப்டனாக நியமிக்கலாம் என்று டு பிளெசிஸ் தெரிவித்துள்ளார். ஒருவேளை மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை டிரேட் மூலம் வாங்கினால், அவரை கேப்டனாக நியமிக்கலாம் என்று அவர் பரிந்துரைத்துள்ளார்.

மும்பை அணி

மும்பை இந்தியன்ஸ் அணி 2026-ம் ஆண்டு தொடரில் ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடி 9-வது இடத்தைப் பிடித்தது. அந்த அணி 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டுமே பெற்றது.

இதனால் கேப்டன் பொறுப்பில் மாற்றம் செய்யலாம் என்று டு பிளெசிஸ் கருதுகிறார். மீண்டும் ரோகித் சர்மாவிடம் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்கலாம் அல்லது வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு அந்த வாய்ப்பை வழங்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற 7 அணிகள்

மற்ற 7 ஐ.பி.எல். அணிகளும் தங்களது முந்தைய கேப்டன்களையே தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்றும் டு பிளெசிஸ் பரிந்துரைத்துள்ளார்.

அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு அக்சர் படேல், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சுப்மன் கில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரியான் பராக், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ரஜத் படிதார், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு பேட் கம்மின்ஸ் ஆகியோர் கேப்டன்களாக தொடரலாம் என்று அவர் கூறியுள்ளார்.

X