

ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட், 2027-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்காக தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் விளையாடி வருவதால், தனது உடல் மற்றும் மனதளவிலான பணிச்சுமையை குறைக்கும் நோக்கில் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகத்திடமும் அவர் தனது முடிவை தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிராவிஸ் ஹெட் இல்லாதது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேட்டிங் வரிசைக்கு பின்னடைவாக அமையலாம். குறிப்பாக தொடக்கத்திலேயே அதிரடியாக விளையாடி எதிரணியின் பந்துவீச்சை நிலைகுலையச் செய்யும் திறன் கொண்டவர் ஹெட். அபிஷேக் சர்மாவுடன் இணைந்து அவர் அமைத்த தொடக்க ஜோடி ஐதராபாத் அணியின் பலமாக இருந்து வந்தது. இதனால் 2027-ம் ஆண்டு தொடரில் அவருக்கு மாற்றாக மற்றொரு வெளிநாட்டு தொடக்க ஆட்டக்காரரை தேர்வு செய்ய வேண்டிய நிலை அந்த அணிக்கு ஏற்படலாம்
இதற்கிடையே, ஆஸ்திரேலிய அணிக்கு 2027-ம் ஆண்டு சர்வதேச போட்டிகள் நிறைந்த ஆண்டாக அமைய உள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆஷஸ் தொடர் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பை என அடுத்தடுத்து முக்கியமான போட்டிகள் நடைபெற உள்ளன. இதனால் வீரர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு, ஐபிஎல் தொடரில் வீரர்கள் பங்கேற்பது குறித்து அவர்களின் உடல்நிலை மற்றும் போட்டி அட்டவணையைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்