

ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் தேர்வு குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த மூன்று சீசன்களாக அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
இதனால் அடுத்த சீசனில் ரோஹித் சர்மா அல்லது இளம் வீரர் திலக் வர்மா ஆகிய இருவரில் ஒருவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பை அணிக்காக ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்த அனுபவம் ரோஹித் சர்மாவுக்கு சாதகமாக உள்ளது. அடுத்த ஆண்டு அவருக்கு 40 வயதாக இருப்பதால், 2027 சீசனில் ஒரு வருடத்திற்கு மீண்டும் கேப்டன் பொறுப்பை வழங்கி அணியை வழிநடத்தச் செய்யலாம் எனக் கருதப்படுகிறது.
மறுபுறம், இந்திய டி20 அணியின் துணைக் கேப்டனாக இருக்கும் திலக் வர்மா, மும்பை அணியின் எதிர்கால கேப்டனாக உருவாக்கப்படலாம். அவருக்கு ரோஹித் சர்மாவின் கீழ் கேப்டன்சி அனுபவம் வழங்கி, நீண்ட காலத்திற்கு அணியை வழிநடத்தத் தயார்படுத்தலாம் என்ற திட்டமும் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஹர்திக் பாண்டியாவை வேறு அணிக்கு மாற்றுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவருக்குப் பொருத்தமான மாற்று ஒப்பந்தம் கிடைக்காவிட்டால், மும்பை அணியிலேயே தொடர்ந்து விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது. மும்பை அணியின் உரிமையாளர் ஆகாஷ் அம்பானி, நிர்வாகி ராகுல் சங்வி மற்றும் தலைமைப் பயிற்சியாளர் கீரன் பொல்லார்ட் ஆகியோர் இணைந்து கேப்டன் தேர்வு குறித்து முக்கிய முடிவெடுக்க உள்ளனர். 2027 ஐபிஎல் தொடருக்குப் பிறகு மெகா ஏலம் நடைபெற இருப்பதால், எதிர்கால அணியை உருவாக்குவதற்கான திட்டத்தையும் மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் கவனத்தில் கொண்டுள்ளது. இருப்பினும், ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக நியமிக்கப்படுவாரா அல்லது திலக் வர்மாவுக்கு புதிய பொறுப்பு வழங்கப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.