ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
Published on

மும்பை,

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 11-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

பஞ்சாப் கிங்ஸ் அணியின் மயங்க் அகர்வால், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் டெல்லி பந்து வீச்சை துவம்சம் செய்தனர். குறிப்பாக மயங்க் அகர்வால் ருத்ர தாண்டவம் ஆடினார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.

பவர்பிளேயில் விக்கெட் இழப்பின்றி 59 ரன்கள் அடித்த பஞ்சாப், முதல் விக்கெட்டுக்கு 62 பந்தில் 100 ரன்கள் அடித்தது. மயங்க் அகர்வால் 25 பந்தில் 7 பவுண்டரி, 2 சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 36 பந்தில் 69 ரன்னில் விளாசி ஆட்டமிழந்தார். அப்போது பஞ்சாப் அணி 12.4 ஓவரில் 122 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் பஞ்சாப் ரன் வேகத்தில் தளர்வு ஏற்பட்டது. கேஎல் ராகுல் 45 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 51 பந்தில் 61 ரன்கள் எடுத்தார்.

கிறிஸ் கெய்ல் 11 ரன்னிலும், நிக்கோலஸ் பூரன் 9 ரன்னிலும் வெளியேறினர். தீபக் ஹூடா ஆட்டமிழக்காமல் 13 பந்தில் 22 ரன்களும், ஷாருக்கான் 5 பந்தில் 15 ரன்களும் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் குவித்தது.

இதையடுத்து 196 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வீஷா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினர். ப்ரித்வீஷா 17 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்சர்களை விளாசி 32 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் 9 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் ரிஷப் பண்ட் 16 பந்துகளை சந்தித்து 15 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இந்நிலையில் மறுபுறம் நிலைத்து நின்று களத்தில் அதிரடி காட்டிய ஷிகர் தவான் பஞ்சாப் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அரைசதத்தை கடந்து 13 பவுண்டரிகள், 2 சிக்சர்களுடன் சதத்தை நெருங்கிய ஷிகர் தவான், 92 ரன்கள் எடுத்த நிலையில் பவுல்ட் ஆனார். இறுதியாக டெல்லி அணி 18.2 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுக்ளை இழந்து 198 ரன்கள் குவித்தது. இதன் மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com