ஐ.பி.எல். கிரிக்கெட்: சதம் விளாசிய ஜாஸ் பட்லர் - ஐதராபாத் அணிக்கு 221 ரன்கள் இலக்கு நிர்ணயம்

ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 220 ரன்கள் குவித்துள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்: சதம் விளாசிய ஜாஸ் பட்லர் - ஐதராபாத் அணிக்கு 221 ரன்கள் இலக்கு நிர்ணயம்
Published on

டெல்லி,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் இன்றைய 28-வது லீக் ஆட்டம் டெல்லியில் உள்ள அருண் ஜெய்ட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன.

இன்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன், பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லர் மற்றும் யசஸ்வி ஜெய்ஸ்வால் களமிறங்கினர்.

ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் 12 ரன்களுடன் எல்.பி.டபில்யூ முறையில் அவுட் ஆகி நடையை கட்டினார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்தார். இதில் சஞ்சு சாம்சன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சீரான இடைவெளியில் 4 பவுண்டரிகளையும், 2 சிக்சர்களையும் பறக்கவிட்டார். 33 பந்துகளில் 48 ரன்கள் எடுத்த நிலையில், விஜய் சங்கரின் பந்துவீச்சில் கேட்ச் ஆகி, சஞ்சு சாம்சன் தனது அரைசதத்தை தவற விட்டார்.

மறுமுனையில் அதிரடி காட்டிய ஜாஸ் பட்லர், 56 பந்துகளில் இன்று தனது முதல் ஐ.பி.எல். சதத்தை பதிவு செய்தார். நிலைத்து நின்று ஆடிய அவர், ஐதராபாத் அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். மொத்தம் 64 பந்துகளை சந்தித்து 11 பவுண்டரிகள், 8 சிக்சர்களுடன் 124 ரன்கள் குவித்த ஜாஸ் பட்லர், 19-வது ஓவரில் சந்தீப் சர்மா வீசிய பந்தில் பவுல்ட் ஆனார்.

இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் குவித்தது. இதையடுத்து 221 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி தற்போது விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com