

ஜெய்ப்பூர்,
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 43வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்ய வந்த ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஜெய்ஸ்வால் (6), சூர்யவன்ஷி (4)ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதையடுத்து கேப்டன் ரியான் பராக் மற்றும் துருவ் ஜுரேல் இருவரும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக ரியான் பராக், டெல்லியின் பந்துவீச்சை பவுண்டரிக்கு பறக்கவிட்டார். அவர் 50 பந்துகளில் 8 பவுண்டரி, 5 சிக்சருடன் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் பெரேராவின் அதிரடி ஆட்டத்தின் மூலம் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி பேட்டிங் செய்தது. டெல்லிக்கு தொடக்கமே அற்புதமாக அமைந்தது. கேல்.எல்.ராகுல்-பதும் நிசாங்கா ஜோடி ராஜஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தது. 4.1 ஓவரிலேயே அணியின் ஸ்கோர் 50-ஐ கடந்தது. இதில் அதிரடியாக ஆடிய நிசாங்கா 23 பந்துகளில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அணியின் ஸ்கோர் 8.4 ஓவரிலேயே 100 ரன்களை தொட்டது. அப்போது அதிரடியாக ஆடிய நிசாங்கா 62(33) ரன்களில் அவுட்டானார்.
பின்னர் ராகுலுடன் நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து ராகுல் அரைசதம் கடந்தார். இருவரும் அதிரடியாக ரன் குவித்து வந்தநிலையில், ராணா 33(17) ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து ராகுல் 75(40) ரன்கள் அடித்து அவுட்டானார். பின்னர் ஸ்டப்ஸ்-அஷுதோஷ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் அணியை வெற்றியை நோக்கி கூட்டி சென்றனர். இறுதியில் 19.1 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி வெற்றி பெற்றது. ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர், பர்கர் மற்றும் தேஷ்பாண்டே தலா 1 விக்கெட் எடுத்தனர்.