

நியூ சண்டிகர்,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் 29-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
இந்த சீசனில் இதுவரை தோல்வியே சந்திக்காத ஒரே அணியாக பஞ்சாப் கிங்ஸ் கம்பீரமாக வலம் வருகிறது. விளையாடிய 5 ஆட்டங்களில் சென்னை, ஐதராபாத், மும்பை மற்றும் குஜராத் ஆகிய வலிமையான அணிகளை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது (கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது).
மறுபுறம், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. விளையாடிய ஆட்டங்களில் வெற்றி-தோல்விகளை மாறி மாறி சந்தித்து வரும் அந்த அணி, நடப்புத் தொடரில் இதுவரை ஒருமுறை கூட 190 ரன்களைக் கடக்கவில்லை என்பது பெரும் குறையாகப் பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் இதுவரை ஐ.பி.எல். வரலாற்றில் 6 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சுவாரசியமாக இரு அணிகளுமே தலா 3 வெற்றிகளைப் பெற்று சமபலத்துடன் உள்ளன. இதனால் நியூ சண்டிகரில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த மோதலில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த 2026 ஐ.பி.எல் சீசனில் பஞ்சாப் அணி இதுவரை காட்டியுள்ள "அன்பீட்டன்" அந்தஸ்தை லக்னோ உடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.