

மும்பை,
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஏற்கனவே பெங்களூரு, குஜராத் மற்றும் ஐதராபாத் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள ஒரு இடத்தை பிடிக்க பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா ஆகிய 3 அணிகளுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் வெற்றி பெறும் பட்சத்தில் நேரடியாக பிளே-ஆப் சுற்றுக்குள் நிழைந்துவிடும். இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில், ராஜஸ்தான் அணி 5 முறை சாம்பியனான மும்பை அணியை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது.
மும்பை அணி இந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, 9 தோல்விகளுடன் 8 புள்ளிகள் மட்டுமே பெற்று ஏற்கனவே பிளே-ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. இருப்பினும், சொந்த மைதானத்தில் நடைபெறும் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்று ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க வேண்டும் என்ற நோக்கில் களமிறங்குகிறது.
மறுபுறம், ராஜஸ்தான் அணி 13 போட்டிகளில் 7 வெற்றி, 6 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் நேரடியாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழையும். தோல்வியடைந்தால் வெளியேறும் அபாயம் உள்ளது.
இரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை 16 போட்டிகளிலும், ராஜஸ்தான் 15 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. எனவே, பிளே-ஆப் வாய்ப்பை உறுதி செய்யும் நோக்கில் ராஜஸ்தானும், வெற்றியுடன் சீசனை நிறைவு செய்யும் நோக்கில் மும்பையும் களமிறங்குவதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.