

சென்னை,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த பயிற்சியாளர் யார் என்ற கேள்வி ஒட்டுமொத்த சிஎஸ்கே ரசிகர்களின் மனதிலும் எழுந்திருக்கிறது.
ஐபிஎல் வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணிகளில் ஒன்றான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து ஸ்டீபன் பிளெமிங் நேற்று விலகினார்.
2008-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடக்க சீசனில் வீரராக சென்னை அணியில் இணைந்த பிளெமிங், 2009 முதல் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்று, சிஎஸ்கேவை உலகின் மிகவும் வெற்றிகரமான டி20 பிராஞ்சைஸிகளில் ஒன்றாக உருவாக்கினார்.
அவரது பயிற்சியின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 ஐபிஎல் கோப்பைகளையும், 2 சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டங்களையும் கைப்பற்றியது. மேலும், 12 முறை பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்று, 10 முறை ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடி புதிய சாதனைகளைப் படைத்தது.
ஸ்டீபன் பிளெமிங் பதவியில் இருந்து விலகியதை தொடர்ந்து, சென்னை அணியின் அடுத்த தலைமைப் பயிற்சியாளர் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிளெமிங்கின் விலகலைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காக மகேந்திர சிங் தோனி, ராகுல் டிராவிட், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஹேமங் பதானி ஆகியோரின் பெயர்கள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன. இருப்பினும், இதுகுறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் இதுவரை எந்த அதிகாபூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.