

சென்னை,
துலீப் கோப்பை 2026 இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று தொடங்கியது. கிழக்கு – தெற்கு மண்டல அணிகள் மோதும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஈஸ்ட் ஜோன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
தொடக்க வீரர்களாக வைபவ் சூர்யவன்ஷி, அபிமன்யு ஈஸ்வரன் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
15 வயது இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, அதிரடியாக விளையாடினார். குறிப்பாக முகமது சிராஜ் வீசிய ஓவரில் 4, 6, 4 என அடுத்தடுத்து பவுண்டரி, சிக்சர் விளாசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.
37 பந்துகளை எதிர்கொண்ட சூர்யவன்ஷி 44 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகள், 1 சிக்சர் அடங்கும். அரைசதம் அடிக்க இன்னும் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சி.வி. மிலிந்த் வீசிய பவுன்சர் பந்தை சிக்சருக்கு அடிக்க முயன்றபோது கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
சூர்யவன்ஷி ஆட்டமிழந்த பின்னரும் அபிமன்யு ஈஸ்வரன் சிறப்பாக விளையாடினார். அவர் அரைசதம் கடந்ததுடன் ஈஸ்ட் ஜோனின் ஸ்கோரை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் இஷான் கிஷன் ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய இஷான், பின்னர் பந்துவீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை குவித்தார். அதிரடியாக விளையாடி சதம் அடித்தார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் கிழக்கு மண்டல அணி 385 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற வலுவான நிலையில் இருந்தது. இஷான் கிஷன் 111 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.