விராட் கோலியால் அது நடக்கவில்லை - உத்தப்பாவின் குற்றச்சாட்டை மறுத்த ராயுடு.. என்ன நடந்தது..?

தமக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றால் அவர்களை அணியிலிருந்து விராட் கோலி நீக்கி விடுவார் என்ற குற்றச்சாட்டை உத்தப்பா முன் வைத்தார்.
விராட் கோலியால் அது நடக்கவில்லை - உத்தப்பாவின் குற்றச்சாட்டை மறுத்த ராயுடு.. என்ன நடந்தது..?
Published on

மும்பை,

2019-ம் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று காத்திருந்த அம்பத்தி ராயுடு, அது நடக்காததால் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த அவர் இந்திய கிரிக்கெட் வாரியத்தை விமர்சிக்கும் வகையில் சில கருத்துகளை பகிர்ந்தார்.

அந்த தொடரில் இந்திய அணியின் மாற்று வீரர்கள் பட்டியலில் இடம் பெற்று இருந்த அம்பத்தி ராயுடு, விஜய் சங்கர் காயத்தால் போட்டியில் இருந்து விலகியதால் தமக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால் மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன் காரணமாக 33 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக ராயுடு அறிவித்தார்.

ஆனால் இதற்கு காரணம் விராட் கோலிதான் என்று இந்திய முன்னாள் வீரர் உத்தப்பா தெரிவித்துள்ளார். மேலும் தமக்கு யாரையாவது பிடிக்கவில்லை என்றால் அவர்களை விராட் கோலி அணியிலிருந்து நீக்கி விடுவார் என்றும் பகிரங்க குற்றச்சாட்டை அவர் முன் வைத்தார். 

இந்நிலையில் ராபின் உத்தப்பாவின் அந்த குற்றச்சாட்டை மறுத்து பேசியிருக்கும் அம்பத்தி ராயுடு, "உத்தப்பா சொல்ல வந்தது கோலிக்கு விருப்பு, வெறுப்புகள் உள்ளன என்பதை மட்டும்தான். ஆனால் என்னை பொருத்தவரை விராட் கோலியால் என்னுடைய இடம் பறிபோகவில்லை. அவர் என்னை மிகவும் விரும்பினார். அவரது தலைமையின் கீழ்தான் நான் இந்திய அணிக்காக பல ஆட்டங்களில் விளையாடி இருக்கிறேன்.

எப்போதுமே அவர் எனக்கு ஆதரவாகத்தான் இருந்து வந்தார். அதனால் விராட் கோலி என்னை நீக்கியதாக நான் என்றும் கூறமாட்டேன். அது அணி நிர்வாகத்தின் ஒட்டுமொத்த முடிவாகத்தான் அப்போது இருந்தது. எனவே விராட் கோலியின் மீது எனக்கு எவ்வித வெறுப்பும் கிடையாது" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com