'நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்றிவிட்டேன்'... அபிஷேக் சர்மா உருக்கம்

அபிஷேக் சர்மா இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அபிஷேக் சர்மா
Published on

சென்னை,

தன் மீது நம்பிக்கை வைத்தவர்களை ஏமாற்றிவிட்டதாக அபிஷேக் சர்மா உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

ஜிம்பாப்வே தொடர்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது. இளம் வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை ஒயிட்வாஷ் செய்தது.

வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி

இந்த தொடரில் பேட்டிங்கில் அபாரமாக விளையாடிய வைபவ் சூர்யவன்சி, சர்வதேச கிரிக்கெட் வரலாற்றிலேயே 'தொடர் நாயகன்' விருதை வென்ற மிக இளம் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

தொடர்ந்து தடுமாறும் அபிஷேக் சர்மா

வைபவ் சூர்யவன்ஷி சிறப்பாக விளையாடிய நிலையில், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் சர்மா இந்த தொடரில் ரொம்ப தடுமாறினார். அவர், மூன்று போட்டிகளிலும் முறையே 1, 8 மற்றும் 2 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்த மோசமான பார்ம் ஜிம்பாப்வே தொடரில் மட்டும் அல்லாமல், அதற்கு முன்பு நடைபெற்ற அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களிலும் தெரிந்தது. அந்த இரண்டு தொடர்களிலும் அவர் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே பதிவு செய்திருந்தார். கடைசி 6 டி20 இன்னிங்ஸ்களில் அவர் முறையே 10, 16, 3, 1, 8, 2 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

உருக்கமான பதிவு

இந்நிலையில், அபிஷேக் சர்மா இன்ஸ்டாகிராமில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பலர் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு உங்களால் பலன் அளிக்க முடியாமல் போகும்போது அது மிகுந்த வேதனையைத் தருகிறது. ஆனால், தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பவர்களை இந்த விளையாட்டு எப்போதும் கைவிட்டதில்லை. அணி வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி. விரைவில் மேலும் வலிமையுடன் மீண்டு வருவேன்’ என்று தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com