அவமானப்பட்டது இந்தியாதான்.. நாங்கள் அல்ல - பாக்.முன்னாள் வீரர் சர்ச்சை கருத்து

பாகிஸ்தான் வீரர்களுடன் இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்த சம்பவம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
image courtesy:BCCI
image courtesy:BCCI
Published on

லாகூர்,

ஆசிய கோப்பை தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் பரம எதிரிகளான இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.

முன்னதாக பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் கொடூர தாக்குதல், அதற்கு இந்தியாவின் பதிலடியால் உருவான போர் பதற்றம் தணிந்த பிறகு இவ்விரு அணிகளும் சந்தித்த முதல் போட்டி என்பதால் கிரிக்கெட் உலகின் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்த்து இருந்தது.

போட்டி முடிந்ததும் இரு அணி வீரர்களும் கைகுலுக்குவது வழக்கம். ஆனால் இந்த ஆட்டம் முடிந்ததும், இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்துவிட்டனர். பாகிஸ்தான் வீரர்கள் கை குலுக்குவதற்காக களத்தில் இருந்த நிலையில் இந்திய வீரர்கள் வெளியேறினர். இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாகியுள்ளது.

இந்நிலையில் இந்த விவகாரத்தில் அவமானப்பட்டது இந்தியா தானே தவிர தாங்கள் இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வீரரான ஷாகித் அப்ரிடி சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளை தெரிவித்துள்ளார். குறிப்பாக சமூக வலைதளங்களில் ஏற்பட்ட அழுத்தத்தை கையாளத் தவறியதால் கை குலுக்காமல் இந்திய அணியினர் வெளியேறியதாக அவர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், ஆசிய கோப்பை தொடங்கியபோது, இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக சமூக வலைதளங்களில் புறக்கணிப்பு பிரச்சாரங்கள் நிறைந்திருந்தன. அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் பிசிசிஐ மற்றும் அவர்களுடைய வீரர்கள் எங்களுடைய அணியுடன் கை குலுக்க வேண்டாமென்று கூறியதில் ஆச்சரியமில்லை.

என் கருத்துப்படி, இதில் விளையாட்டு மனப்பான்மை இல்லை. அவர்கள் மீண்டும் உலகின் முன் அவமானப்பட்டுள்ளார்கள். இந்த விவகாரத்தில் எங்களது நிலைப்பாடு சரியாக இருந்தது என்று நினைக்கிறேன். எங்கள் கிரிக்கெட் வாரிய தலைவர் சரியான முடிவு எடுத்துள்ளார். வீரர்கள் விளையாட்டின் சிறந்த தூதர்களாக இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் கூறியிருக்கிறேன்.

நான் இங்கே இந்திய வீரர்களை குறை கூற விரும்பவில்லை; அவர்களுக்கு மேலிருந்து உத்தரவு வந்தது. அதே சூர்யகுமார் யாதவ், கேப்டன்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் சல்மான் ஆகாவுடனும் மொஹ்சின் நக்வியுடனும் கை குலுக்கினார். ஆனால் இப்போது பார்வையாளர்கள் முன்னிலையில் சமூக வலைதளத்தின் அழுத்தத்தை அவர்களால் கையாள முடியவில்லை. இந்திய வீரர்கள் இப்போது உலகின் முன் அவமானமாகி விட்டனர் என்று கூறினார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com