

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் பானுகா ராஜபக்ச, இத்தாலியில் நடைபெறவுள்ள இத்தாலி டி10 கிரிக்கெட் தொடரில் வெனிஸ் லைவ்வயர்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். வெளிநாட்டு வீரர்களின் வருகை அதிகரித்து வரும் நிலையில், ராஜபக்சவின் இணைவு அந்த அணியின் பேட்டிங் வரிசைக்கு கூடுதல் வலுசேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
34 வயதான பானுகா ராஜபக்ச, இடதுகை அதிரடி பேட்ஸ்மேன் ஆவார். இலங்கை அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ள இவர், டி20 போட்டிகளில் தனது அதிரடி பேட்டிங்கால் கவனம் ஈர்த்தவர். இலங்கை அணிக்காக 45 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 744 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 3 அரைசதங்களும் அடங்கும். மேலும், ஐபிஎல், பாகிஸ்தான் சூப்பர் லீக், அபுதாபி டி10 உள்ளிட்ட பல்வேறு பிரபலமான டி20 தொடர்களிலும் பங்கேற்ற அனுபவம் கொண்டவர்.
இந்தத் தொடரில் வெனிஸ் லைவ்வயர்ஸ், ரோம் கிளாடியேட்டர்ஸ், மிலன் ஐகான்ஸ், நேபிள்ஸ் நைட்ஸ் உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு போட்டியும் 10 ஓவர்கள் கொண்ட அதிரடி ஆட்டமாக நடைபெற உள்ளது.
இந்தத் தொடரில் கிறிஸ் கெயில், ஷான் மார்ஷ், டேவிட் மலான், ஜேம்ஸ் ஆண்டர்சன் உள்ளிட்ட சர்வதேச கிரிக்கெட்டில் புகழ்பெற்ற வீரர்களும் பங்கேற்க உள்ளனர். வெனிஸ் லைவ்வயர்ஸ் அணியில் முன்னாள் இந்திய வீரரும் தேர்வுக்குழுத் தலைவருமான எம்.எஸ்.கே. பிரசாத் அணியின் இயக்குநராகப் பொறுப்பேற்றுள்ளார். மேலும், இந்திய சுழற்பந்துவீச்சாளர் கே.சி. கரியப்பாவும் அணியில் இணைந்துள்ளார்.