

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது. இந்தத் தொடரின் முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 13ஆம் தேதி பெர்த்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாகத் தயாராகி வரும் நிலையில், இங்கிலாந்து அணிக்கு காயம் காரணமாகப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேனும் ஆல்ரவுண்டருமான ஜேக்கப் பெத்தேல், வலது கால் முட்டியில் ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாகக் குணமடையாததால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒட்டுமொத்த வெள்ளைப்பந்து தொடரிலிருந்தும் விலகியுள்ளார். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது ஜூலை மாதம் அவருக்கு கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு போட்டிகளில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வந்த அவர், ஆஸ்திரேலிய தொடரின் மூலம் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதற்காக ஆஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த பெத்தேல், பெர்த்தில் நடைபெற்ற பயிற்சியின்போது மீண்டும் வலது கால் முட்டியில் பிரச்சினையைச் சந்தித்தார். இதையடுத்து அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகளின் அடிப்படையில் அவர் தொடரிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
பெத்தேல் விலகியுள்ளதால், அவருக்குப் பதிலாக சசெக்ஸ் அணியைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் கோல்ஸ் மற்றும் ஹாம்ப்ஷயர் அணியின் வேகப்பந்துவீச்சாளர் எடி ஜாக் ஆகியோர் ஒருநாள் போட்டிக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.