

சென்னை,
ஐக்கிய அரபு அமீரக(யுஏஇ) அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஹூர் கான், இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா குறித்து பரபரப்பான தகவலை பகிர்ந்துள்ளார்.
பந்துவீச்சு ஆக்சனை மாற்றாமல் ஸ்லோ பந்துகளை எப்படி வீசுவது என்பதை தானே பும்ராவுக்கு கற்றுக் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை 2026-ல் பும்ராவின் பந்துவீச்சு அபாரமாக இருந்ததைத் தொடர்ந்து, இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் 2019 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் நடந்ததாக ஜஹூர் கான் தெரிவித்துள்ளார். மும்பை அணிக்காக அவர் நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். அப்போது ஒரு ஓவரில் யார்க்கர் பந்துக்குப் பிறகு தொடர்ந்து ஐந்து ஸ்லோ பந்துகளை வீசி மேடன் ஓவர் எடுத்ததாகவும் ஸ்லோ பவுன்சரை பேட்டர் அடிக்க முடியாமல் தவித்ததாகவும் கூறினார்.
ஒரு நாள் பும்ரா, “ஒரே ஆக்சனில் ஸ்லோ பந்தை எப்படி வீசுவது?” என்று கேட்டதாக ஜஹூர் கான் கூறினார். நெட் பயிற்சியில் தனது ஸ்லோ பந்துவீச்சு நுட்பத்தை பும்ராவுக்கு காட்டியதாகவும், அதை பார்த்த பும்ரா “இது வேர லெவல்” என்று பாராட்டியதாகவும் கூறினார். உலகத் தரம் வாய்ந்த பவுலர் ஒருவருக்கு தனது நுட்பம் உதவியது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.