

பாலி,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக ஜெய் ஷா 2-வது முறையாக போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ஐசிசி இயக்குநர்கள் வாரியக் கூட்டத்தில், உறுப்பினர்களின் ஒருமனதான ஆதரவுடன் அவர் மீண்டும் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஐசிசி உறுப்பினர்களின் ஒருமனதான முன்மொழிவைத் தொடர்ந்து ஜெய் ஷா மீண்டும் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது தலைமையின் மீது ஐசிசி வாரியம் வைத்துள்ள நம்பிக்கையை இந்த மறுதேர்வு வெளிப்படுத்தியுள்ளது.
2028-ம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெற உள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் களத்தில் கிரிக்கெட் இடம்பெறுவது இவ்விளையாட்டின் வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி உலகம் முழுவதும் கிரிக்கெட்டை விரிவுபடுத்துவது, புதிய ரசிகர்களை உருவாக்குவது மற்றும் அடுத்த தலைமுறை வீரர்களை ஊக்குவிப்பது ஆகியவை ஐசிசியின் முக்கிய இலக்குகளாக உள்ளன.
உலகளவில் கிரிக்கெட்டை பிரபலப்படுத்துதல், மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஊக்கமளித்தல், வளர்ந்து வரும் உறுப்பு நாடுகளுக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்துதல் மற்றும் கிரிக்கெட்டின் எதிர்காலத்தை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் அடுத்தகட்டமாக கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுதேர்வு குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஜெய் ஷா, ஐசிசி வாரியம் தன் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்தார்.
மேலும், 2028 ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெறுவது புதிய ரசிகர்களையும் அடுத்த தலைமுறை வீரர்களையும் உருவாக்குவதற்கான அரிய வாய்ப்பு என்றும், மக்களை ஒன்றிணைப்பதே கிரிக்கெட்டின் மிகப்பெரிய பலம் என்றும் குறிப்பிட்டார்.
வெறும் போட்டிகளை நடத்துவதோடு நின்றுவிடாமல், வருங்காலத் தலைமுறைக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துத் தருவதே தங்களின் முதன்மை நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.