களத்திற்குள் அத்துமீறி நுழைவது சரி அல்ல- டெல்லி அணி மீது ஜெயவர்தனே அதிருப்தி

நோ பால் சர்ச்சை குறித்து ஜெயவர்தனே நடுவர்களுக்கு புதிய யோசனை ஒன்றையும் வழங்கியுள்ளார்.
Image Courtesy : BCCI / IPL
Image Courtesy : BCCI / IPL
Published on

மும்பை,

15 ஆவது ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் மும்பையில் நடைபெற்று வருகிறது. இதன் 34 ஆவது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

இதில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்தது இதையடுத்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் டெல்லி அணி விளையாடியது.

டெல்லி அணி வெற்றிக்காக போராடிவந்த நிலையில், கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 36 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ஒபட் மெக்காய் போட வந்த நிலையில், ஆறு பந்துகளையும் சிக்சருக்கு விளாசினால் மட்டுமே டெல்லி அணிக்கு வெற்றி என்ற நிலை இருந்தது.

கடைசி ஓவரை ரோவ்மேன் பவல் எதிகொண்டார். அவர் முதல் 3 பந்துகளையும் சிக்சருக்கு பறக்கவிட்டு அசத்தினார். இதனால் டெல்லி அணியினர் உற்சாகமடைந்தனர். அப்போது 3 ஆவது பந்தில் நோ பால் சர்ச்சையும் எழுந்தது.

ஆனால், நடுவர்கள் இதனை நோ பால் கொடுக்க மறுத்தனர். இதனால், மைதானத்திற்கு வெளியே அமர்ந்திருந்த டெல்லி அணியினர் மிகவும் சீற்றத்துடன் கானப்பட்டனர். ஷர்தூல் தாக்கூர் உள்ளிட்ட சிலர், மூன்றாம் நடுவர் இதில் தலையிட வேண்டும் என்றும் சைகையின் மூலம் தெரிவித்தனர். ஆனால், நடுவர்கள் இதனை கண்டுகொள்ளவில்லை.

இடையே ஷேன் வாட்சன் ரிஷப் பண்டிடம் ஏதோ கூற, கோபத்தின் உச்சிக்கு சென்ற ரிஷப், பேட்ஸ்மேன்களை வெளியே வருமாறு சைகை காட்டினார். இதனால், போட்டியில் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

மேலும், உதவிப் பயிற்சியாளரான பிரவின் ஆம்ரே, ஒரு படி மேலே சென்று மைதானத்திற்குள்ளேயே நுழைந்து நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து நடுவர்கள் அவரை சமாதானப்படுத்தி மைதானத்திற்கு வெளியே அனுப்பினர்.

நடுவர்கள் பேட்ஸ்மேன்களை சமாதானப்படுத்திய பிறகு ஆட்டம் மீண்டும் தொடங்கியது. அடுத்த 3 பந்துகளை எதிர்கொண்ட ரோவ்மேன் பவல், இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். இதனால், ராஜஸ்தான் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இதனை தொடர்ந்து நோ பால் சர்ச்சையால், ஆட்டத்தை நிறுத்தமுயன்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்டுக்கு ஐபிஎல் விதிமுறை மீறலுக்காக போட்டிக்கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. ஷர்தூல் தாக்கூருக்கு போட்டிக்க்கட்டணத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் தொடர்பாக இலங்கை அணியின் முன்னாள் வீரரும், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளருமான மஹேலா ஜெயவர்தனே கருது தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "கண்டிப்பாக இது மாதிரியான நோ பால் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். 3-வது நடுவர் பார்த்து கள நடுவர்களுக்கு அறிவுறுத்தும்படி செய்ய வேண்டும். ஆனால் அதேவேளையில், இந்த விஷயத்தில் டெல்லி அணி செயல்பட்ட விதம் அதிருப்தியளிக்கிறது.

போட்டியை நிறுத்துவதோ, களத்திற்குள் அத்துமீறி நுழைவதோ சரியில்லை. 3-வது நடுவரிடம் செல்வதற்கு விதிமுறைகள் அனுமதிக்கவில்லை எனும்போது அதை செய்ய வலியுறுத்துவதில் அர்த்தம் இல்லை.

போட்டியின் இடையே இரண்டரை நிமிடம் பிரேக்கில் பயிற்சியாளர்கள் களத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். அப்போது மட்டும்தான் உள்ளே செல்ல வேண்டுமே தவிர, எல்லா நேரத்திலும் பயிற்சியாளர்கள் செல்லக்கூடாது" என்று ஜெயவர்தனே தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com