11-வது வீரராக களமிறங்கி அதிக ரன்கள்... டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த உனத்கட்

11-வது வீரராகக் களமிறங்கிய உனத்கட் 3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உட்பட 40 ரன்கள் எடுத்தார்.
ஜெய்தேவ் உனத்கட்
Published on: 

இந்தூர்,

டி20 கிரிக்கெட்டில் 11-வது வீரராக களமிறங்கி அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை சவுராஷ்டிரா அணியின் கேப்டன் ஜெய்தேவ் உனத்கட் படைத்துள்ளார்.

முந்தைய சாதனையை முறியடித்த உனட்கட்

இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்ற தமிழக அணிக்கு எதிரான ஆட்டத்தில், 11-வது வீரராகக் களமிறங்கிய உனத்கட் 3 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உட்பட 40 ரன்கள் எடுத்தார்.

இதற்கு முன்பு 2020-ம் ஆண்டு அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணிக்காக விளையாடிய டேனி பிரிக்ஸ், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிராக 18 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 35 ரன்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. 2019-ம் ஆண்டு செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக விளையாடிய டொமினிக் டிரேக்ஸ் 34 ரன்கள் எடுத்திருந்தார்.

62 ரன்கள்

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 193 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. இதையடுத்து களமிறங்கிய சவுராஷ்டிரா அணி, 92 ரன்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்தது.

அப்போது களமிறங்கிய உனத்கட், சேத்தன் சகரியாவுடன் இணைந்து கடைசி விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தார். இருப்பினும், சவுராஷ்டிரா அணியால் இலக்கை எட்ட முடியவில்லை. அந்த அணி 154 ரன்களுக்கு ஆட்டமிழந்து 38 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

X