

லண்டன்,
பாகிஸ்தானுக்கு எதிராக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் இரண்டு இன்னிங்ஸ்களிலும் எல்.பி.டபிள்யூ. (LBW) முறையில் ஆட்டமிழந்து ஒரே டெஸ்ட் சீசனில் அதிக முறை எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்த தனது மோசமான சாதனையை சமன் செய்துள்ளார்.
முதல் இன்னிங்ஸில் முகமது அப்பாஸ் வீசிய பந்தில் 4 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஜோ ரூட் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 2-வது இன்னிங்ஸில் முகமது அலி வீசிய பந்தில் 24 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
இதன் மூலம், தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரே சீசனில் அதிக முறை எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்த மோசமான சாதனையை 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சமன் செய்துள்ளார்.
2016-17-ம் ஆண்டு வங்காளதேசம் மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஆசிய சுற்றுப்பயணத்தில் ஜோ ரூட் 14 இன்னிங்ஸ்களில் விளையாடி 7 முறை எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்திருந்தார். இதில் வங்காளதேசத்துக்கு எதிராக 2 முறையும், இந்தியாவுக்கு எதிராக 5 முறையும் எல்.பி.டபிள்யூ ஆனார்.
தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2026-ம் ஆண்டு இங்கிலாந்து ஹோம் சீசனில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக ஜோ ரூட், வெறும் 9 இன்னிங்ஸ்களிலேயே 7 முறை எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்துள்ளார்.