டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள்: ரிக்கி பாண்டிங்கை பின்னுக்கு தள்ளி 2-வது இடம் பிடித்த ஜோ ரூட்

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன் குவித்த வீரராக சச்சின் தெண்டுல்கர் உள்ளார்.
image courtesy:ICC
image courtesy:ICC
Published on

மான்செஸ்டர்,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிராப்போர்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 114.1 ஓவர்களில் 358 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 46 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 225 ரன்கள் அடித்திருந்தது. ஆலி போப் 20 ரன்களுடனும், ஜோ ரூட் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தொடக்க ஆட்டக்காரர்களான ஜாக் கிராவ்லி 84 ரன்களிலும், பென் டக்கட் 94 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இத்தகைய சூழலில் 3-வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடர்ந்து ஜோ ரூட் மற்றும் போப் சிறப்பாக பேட்டிங் செய்தனர். பென் டக்கட் - கிராவ்லி கூட்டணி போல ஜோ ரூட் - ஆலி போப் கூட்டணியும் சிறப்பாக விளையாடியது. இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த ஆலி போப் 71 ரன்களில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய ஹாரி புரூக்கும் (3 ரன்கள்) சுந்தர் பந்துவீச்சிலேயே வீழ்ந்தார்.

அடுத்து ஜோ ரூட்டுடன், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கூட்டணி சேர்ந்தார். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 38-வது சதத்தை நிறைவு செய்தார். தற்போது வரை இங்கிலாந்து அணி 108 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 458 ரன்கள் அடித்துள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் இதுவரை இந்தியாவை விட 100 ரன்கள் முன்னிலை பெற்று பேட்டிங் செய்து வருகிறது. ஜோ ரூட் 132 ரன்களுடனும், ஸ்டோக்ஸ் 46 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இந்த ஆட்டத்தில் ஜோ ரூட் 121 ரன்கள் அடித்திருந்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இதுவரை அடித்துள்ள ரன்களின் எண்ணிக்கை 13,379 ஆக உயர்ந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன் குவித்த 2-வது வீரர் என்ற மகத்தான சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் ரிக்கி பாண்டிங் 13,378 ரன்களுடன் 2-வது இடத்தில் இருந்தார். தற்போது அவரை பின்னுக்கு தள்ளி ஜோ ரூட் 2-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் 15,921 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com