

துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மேலும் ஒரு இடம் முன்னேறி நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக 3-வது டெஸ்டில் சதம் (121 ரன்) அடித்ததன் மூலம் கூடுதலாக 23 புள்ளிகளை பெற்ற ஜோ ரூட் மொத்தம் 916 புள்ளிகளுடன் உச்சத்தை அடைந்துள்ளார்.
இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு டிசம்பரில் அவர் நம்பர் ஒன் இடத்தில் இருந்திருக்கிறார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாக 5-வது இடம் வகித்த ஜோ ரூட் தொடர்ச்சியாக ரன்மழை பொழிந்ததன் மூலம் நம்பர் ஒன் அந்தஸ்தை எட்டியிருக்கிறார். சிறப்பாக விளையாடி வரும் ஜோ ரூட் டெஸ்ட் தரவரிசையில் 6 ஆண்டுகளுக்கு பின்னர் முதலிடத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை முதலிடத்தில் இருந்த நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 2-வது இடத்துக்கு (901 புள்ளி) இறங்கினார். ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித் 3-வது இடத்திலும் (891 புள்ளி), லபுஸ்சேன் 4-வது இடத்திலும் (878 புள்ளி) தொடருகிறார்கள்.
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் 19, 59 ரன்கள் வீதம் எடுத்த இந்திய வீரர் ரோகித் சர்மா ஒரு இடம் ஏற்றம் கண்டு 5-வது இடத்தை (773 புள்ளி) பிடித்துள்ளார். அவரது சிறந்த தரநிலை இதுவாகும். இங்கிலாந்து தொடரில் தடுமாறி வரும் இந்திய கேப்டன் விராட் கோலி ஒரு இடம் சரிந்து 6-வது இடத்துக்கு (766 புள்ளி) தள்ளப்பட்டார். இந்தியாவின் ரிஷாப் பண்ட் 12-வது இடத்திலும் (4 இடம் சறுக்கல்), புஜாரா 15-வது இடத்திலும் (3 இடம் அதிகரிப்பு), ரஹானே 18-வது இடத்திலும் (4 இடம் வீழ்ச்சி) உள்ளனர்.
பந்து வீச்சாளர் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ், இந்தியாவின் அஸ்வின், நியூசிலாந்தின் டிம் சவுதி மாற்றமின்றி டாப்-3 இடத்தில் தொடருகிறார்கள். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா மாற்றமின்றி 10-வது இடத்தில் நீடிக்கிறார். லீட்ஸ் டெஸ்டில் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட இங்கிலாந்தின் ராபின்சன் 9 இடங்கள் எகிறி 36-வது இடத்துக்கு வந்துள்ளார்.