

கவுகாத்தி,
ஜான், ஷாய், அமீர் ஆகிய 3 வீரர்கள் சதம் விளாசியதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் 405 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அந்த அணியின் ஜான் சேப்பல், கேப்டன் ஷாய் ஹோப், அமீர் ஜன்கோ ஆகிய 3 வீரர்களும் அதிரடியாக சதம் விளாசினர். ஜான் 68 பந்துகளில் 101 ரன்களும், ஷாய் ஹோப் 94 பந்துகளில் 104 ரன்களும், அமீர் ஜன்கோ 77 பந்துகளில் 114 ரன்களும் குவித்தனர்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 405 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா தரப்பில் ஜடேஜா, குல்தீப், குர்னூர் பிரார் தலா 2 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 406 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி இந்தியா களமிறங்கி விளையாட உள்ளது.