

அல் அமெராத்,
ஜூனியர் ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக அர்ஜுன் ராஜ்புத் சதமடித்து அசத்தியுள்ளார்.
13-வது ஜூனியர் ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஓமனில் நடைபெற்று வருகிறது. நவம்பர் 5-ஆம் தேதி தொடங்கிய இந்தத் தொடரில் 8 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் விளையாடி வருகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இந்நிலையில், இன்று நடைபெறும் 8-வது லீக் ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
சரிவிலிருந்து மீட்ட அர்ஜுன் ராஜ்புத்
அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் லக்சயா ராஜேஷ் ராய்சந்தானி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். ஆர்யவீர் சேவாக் 22 ரன்களும், வி.கே. வினீத் 8 ரன்களும் எடுத்து வெளியேறினர். இதனால் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் பொறுப்புடன் விளையாடிய அர்ஜுன் ராஜ்புத், பாகிஸ்தான் பந்துவீச்சைச் சமாளித்து ரன்களை குவித்தார். அதிரடியாக விளையாடிய அவர் சதமடித்து அசத்தினார்.
அவர் 85 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார். இதில் 11 பவுண்டரிகளும், 5 சிக்ஸர்களும் அடங்கும். அவருக்கு உறுதுணையாக கவ்யா படேல் 23 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் இந்திய அணி 46.3 ஓவர்களில் 208 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய உள்ளது.