ஜூனியர் ஆசிய கோப்பை: யு.ஏ.இ அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

இந்தியாவிடம் தோல்வியடைந்த ஐக்கிய அரபு அமீரக அணி தொடரிலிருந்து வெளியேறியது.
india
Published on: 

அல் அமராத்,

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணியை 70 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

ஆர்யவீர் சேவாக் அதிரடி சதம்

ஓமனில் நடைபெற்று வரும் ஜூனியர் ஆசிய கோப்பை தொடரில் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு அமீரக அணியின் கேப்டன் அயான் மிஷாப் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் கேப்டன் லக்சயா ராஜேஷ் 17 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு ஆர்யவீர் சேவாக் - வி.கே. வினீத் ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 193 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக விளையாடிய ஆர்யவீர் சேவாக், 168 பந்துகளில் 17 பவுண்டரிகள், 7 சிக்சர்களுடன் 160 ரன்கள் விளாசினார். வி.கே. வினீத் 69 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார்.

பின்னர் வந்த வீரர்களில் யஷ்பர்தன் சவுகான் 17 ரன்களும், அன்வய் திராவிட் 12 ரன்களும் எடுத்தனர். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 309 ரன்கள் குவித்தது.

74 ரன்கள் எடுத்த அகமது குதாதாத்

இதையடுத்து 310 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஐக்கிய அரபு அமீரக அணிக்கு அகமது குதாதாத் நம்பிக்கை அளித்தார். அவர் 74 பந்துகளில் 74 ரன்கள் எடுத்தார். நூருல்லா அயோபி 25 பந்துகளில் 39 ரன்களும், யாயின் ராய் 44 பந்துகளில் 29 ரன்களும் எடுத்தனர்.

இருப்பினும் மற்ற வீரர்கள் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை. இதனால் ஐக்கிய அரபு அமீரக அணி 50 ஓவர்கள் முடிவில் 239 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் இஷான் சூட் 37 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன் மூலம் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அரையிறுதிக்கு முன்னேறியது இந்தியா

இந்த வெற்றியின் மூலம் 'ஏ' பிரிவில் இந்திய அணி 4 புள்ளிகளைப் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. ஏற்கெனவே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியிருந்தநிலையில், இந்தியாவிடம் தோல்வியடைந்த ஐக்கிய அரபு அமீரக அணி தொடரிலிருந்து வெளியேறியது.

X